Saturday, January 23, 2010

ஆயிரத்தில் ஒருவன்


தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு முன்னேற்றி செல்லும் செல்வரகாவனிற்கு முதலில் வாழ்த்துக்கள். மிகத் திறமையான அனுபவ இயக்குனர்கள் தொட தயங்கும் கதைக் களத்தை தைரியமாய் கையாண்டு சிறந்த படைப்பை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். சரி விஷயத்திற்கு வருகிறேன் இது ஆயிரத்தில் ஒருவன் விமர்சனப் பதிவல்ல, சில விமர்சனங்களை பற்றிய ஒரு பார்வை. நேற்று இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த பொழுது எதேர்ச்சையாய் ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் கண்ணில் பட்டது. மிகுந்த எதிர்பார்புகளுடன் வெளியான படம், முன்று வருட கடின உழைப்பு இப்படி பல ஊந்துதல்கள் படத்தை பார்த்திருந்தும் விமர்சனத்தை படிக்கத் தூண்டியது. படத்தின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் விமர்சனத்தை படித்தேன் ஆரம்பித்தேன், விமர்சனத்தை படிக்க படிக்க ஒரு கட்டத்தில் என்னால் சகிக்க முடியாமல் மூடி வைத்து விட்டேன். இவ்வளவு தரம் குறைந்த விமர்சனத்தை நான் இதுவரை வாசித்தது இல்லை. அதிலும் இது ஒரு பிரபல நாள் இதழின் விமர்சனம் வேறு. எதற்காக இந்த அவசரக் குதறல் என்றே புரியவில்லை. ஏதோ படத்தில் கவுண்டமணி தெருவில் குதித்து குப்புற படுத்து "அவன் என்ன பாத்துட்டான்... பாத்துட்டான் . .." ன்னு கதறுவது போல படத்தை பார்த்த உடன் இவர்களும் திபு திபுவென்று ஓடி பொய் ஒரே மூச்சாய் பேனாவை எடுத்துக் குதற ஆரம்பித்து விடுகிறார்கள். விமர்சனம் என்றால் எதிர்வினையும் அடங்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் அதற்கும் ஒரு தரம் உண்டு, சொல்ல போனால் அதிக படியான எதிர்வினை விமர்சனங்கள் தான் தரமான திரைப்படங்களுக்கு வித்தாக இருக்கும் என்பதை நம்புபவன் நான்.


நேற்று நான் படித்ததும் ஒரு எதிர்வினை தான் ஆனால் எழுதப்பட்ட அனைத்துமே மட்டமான கருத்துக்கள். உடனே அபிப்பிராயமும் கருத்துக்களும் ஒவொருவருக்கும் மாறுபடும் என்று வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிவிடாதிர்கள். மாற்று சினிமா வேண்டும், உலக தரமான திரைப்படங்கள் எடுக்க பட வேண்டும் என்று பிதற்றிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. திரைபடங்களை எதிர் நோக்கும் விதமும் ரசிப்பு தன்மையையும் நாம் முன்னகர்த்திக் கொள்ளவது மிக அவசியம். அதுவும் திரைப்படங்களை விமர்சிபவர்கள் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும். நான் படித்த விமர்சனத்தின் ஆசிரியர் படத்தை எந்த வகையிலும் ரசிக்கவில்லை, புரிந்து கொள்ளவும் இல்லை என்பது விமர்சன நோக்கத்திலே வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. விமர்சனத்தில் ஆசிரியர் எழுப்பிய பல கேள்விகள் அவராகவே பதில் கண்டறிய வேண்டிய ஒன்று. உதாரணத்திற்கு "சோழர்கள் எந்த காலத்தில்யா வியட்நாமுக்கு போனாய்ங்க?.. நம்ம காதுல பூ சுத்துராணுங்க..", " இதில ஆயிரத்தில் ஒருவன் யாருனே தெரியல?..." , "இவங்க எப்படி சோழர் காலத்துக்குள்ள போனாங்கனே புரியல.. ??" போன்ற சில கேள்விகளை எழுப்பி இருந்தார். சொல்ல போனால் இவர் உண்மையிலேயே படம் பார்த்தாரான்னு எனக்கு புரியல. விமர்சனம் செய்பவர்களுக்கு வரலாறோ சோழ ராஜ்ஜியத்தைப் பற்றியோ தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. படைப்பை ஒரு முழு fantasy படமாக பார்த்திருந்தால் மேற்படி கேள்விகளுக்கு அவசியம் இருந்திருக்காது சோழர்களை பற்றிய தகவல்களும் தேவை இருந்திருக்காது. ஆனால் அதெல்லாம் கிடையாது, படத்தில் எது உண்மை எது இயக்குனரின் கற்பனை என்பதை எழுதியே தீருவேன்னு அடம் பிடித்தால் மேற்படி தகவல்களும் விவரமும் மிக அவசியம். குறைந்தபட்சம் சோழர் ஆட்சி வரைபடத்தையாவது ஒரு முறை பார்த்திருப்பது அவசியம். இயக்குனர் மிகுந்த கவனத்துடன் தன் கற்பனையை கலந்திருக்கிறார். சோழர்கள் புலம் பெயர்ந்த காலக் கட்டத்தையும் இடத்தையும் கவனமாய் தேர்வு செய்துள்ளார். திரை படத்தை விமர்சனம் செய்வதற்கு முன் இது மாதிரி சிறு சிறு விஷயங்களை புரிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ மறுப்பதுதான் ஆச்சரியமாய் உள்ளது. படம் பார்த்த உடனே " இதில எப்படிண்ணே எரியும்???"ன்னு செந்தில் கேட்பது போல பத்தாம்பசலி தனமான கேள்விகளையும் விமர்சனங்களையும் நிறுத்தி விட்டு வெவ்வேறு தளங்களில் விமர்சனத்தை முன்வையுங்கள். இந்த படத்தில் தொழில்நுட்பரீதியாய் பல புதுமைகள் செய்ய பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் என்ன மாதிரியான புதுமைகள் செய்யப்பட்டன, எப்படி செய்யப்பட்டன போன்ற தகவல்களும் தாராளமாய் விமர்சனத்திற்குள் கொண்டு வரலாம். படத்தின் இசைக் கோர்வைக்கு சோழர் கால வாத்தியங்கள் பல உபயோகப் படுத்தப்பட்டுள்ளன . அதில் பல கருவிகளை வாசிக்க இன்று எவருமே இல்லை. பூட்டான், தாய்லாந்து நாடுகளில் இதே போன்ற கருவிகள் உபயோகத்தில் இருந்ததை கண்டுபிடித்து அங்கிருக்கும் இசைகலைஞர்களை வைத்து இசையமைத்து இருகிறார்கள். இது கண்டிப்பாக பாரட்ட பட வேண்டிய முயற்சி. இன்னும் இதை பற்றிய தகவல்கள் கண்டிப்பாக அனைவரும் அறியச் செய்ய வெண்டும். என்னளவில் ஒரு முக்கிய மாறுதலான முயற்சிற்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரம் இந்த படத்திற்கு கிடைக்க வேண்டும்.