Friday, May 21, 2010

Puppy Shame



அது வழக்கமான திங்கட்கிழமை, காலை ப்ரேயர் முடிந்து அனைவரும் வரிசையாக கிளாஸ்க்கு சென்று அமந்திருந்தோம். எப்போதுமே முதல் பீரியட் தொடங்கும் முன்னர் ஒரு லேசான கிலி ஏற்படுவது சகஜம் முன்தினம் சொன்ன ஹோம் வொர்க் இத்யாதி இத்யாதி விஷயங்கள் எல்லாம் அப்போதுதான் ஞாபகத்துக்கு வரும். அதுவும் திங்கட்கிழமை காலை என்றால் கேட்கவே வேண்டாம், இந்த பக்கமாதான் ஸ்கூல்க்கு போகணுமான்னு கேட்காத குறையாக வந்து உட்கார்ந்து இருப்பேன். எல்லாம் சரியாய் முடித்திருந்தாலும் அந்த கிலி அடங்க குறைந்தது இரண்டு பீரியட் ஆகும். முதல் பீரியட் இங்கிலீஷ், ரோஸ்லின்ட் மிஸ் உள்ளே வர "குட் மார்னிங் மிஸ்ஸ்..." கோரஸ் , அதே கோரஸ் பக்கத்து பக்கத்து கிளாசிலும் வந்து அடங்கியது. அதற்க்கு பிறகு நிலவும் அமைதி இருக்கிறதே.. அது வயித்துக்கும் வாயிக்கும் உருண்டு கொண்டிருக்கும் கிலியை ஆ காட்டச் சொல்லி வேடிக்கை பார்க்கும். "டேக் யுவர் புக்.. டர்ன் டு பேஜ் தர்ட்டி.." ன்னு மிஸ் சொன்ன பிறகுதான் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பக்கத்து பெஞ்சில் இருக்கும் பானுவையே பார்ப்பேன். கிளாஸ் ஆரம்பித்து இருபது நிமிடம் ஆகியிருக்கும், பிரின்சிபால் மேடம் பரபரப்பாக உள்ளே நுழைந்தார். "குட் மார்னிங் மேடம்ம்ம்.." பதிலுக்கு குட் மார்னிங் வரவில்லை.. சிட் டௌனும் வரவில்லை. இவங்க ரொம்ப நல்ல மேடம் ஆச்சே எப்போ கிளாசுக்கு வந்தாலும் மிஸ்கிட்ட பேசிட்டு போய்டுவாங்க, ஆனா இன்னைக்கு என்ன திரும்பி கிளாச ஒரு டைப்பா பார்க்குறாங்க. எதுக்கும் ஒரு முறை டை, பேட்ஜ் எல்லாம் சரி பார்த்துக் கொண்டேன். என்ன சொல்ல போகிறார் என்று எங்களுடன் மிஸ்ஸும் உன்னிப்பாய் கவனிக்க, " வாட் இஸ் கேபேஜ் இன் டமில்?" என்று கேட்டு விட்டு எங்களை முறைத்து பார்த்தார். ப்பூ இதுதானா விஷயம்.. வேற என்னமோ ஏதோன்னு.. மனசுக்குள்ள ஓடிக் கொண்டிருக்கும்போதே "முட்டை கோசு" என்ற பதில் சத்தமாக என் அனுமதி இல்லாமல் என் வாயில் இருந்தே வந்து தொலைத்தது. நான் யோசிக்க கூட இல்லையே, அதற்க்குள் பதில் எங்கிருந்து வந்தது? பதில் சொன்னதுதான் தாமதம், எங்கிருந்தோ தாவி என் கையை லபக்கென்று பிடித்து தர தரவென்று இழுத்துக்கொண்டு மேடம் ஓட என்ன நடந்தது ஏது நடந்தது என்று புரியாமல் கூடவே நானும் ஓடினேன். இது என்னடா வம்பு, எதாவது தப்பா சொல்லிட்டோமோ? இல்லையே முட்டை கோசு கரெக்ட் ஆச்சே.. ஒரு வேளை கோசு மட்டும் தான் சொல்லனுமா? ஒய் யு செட் முட்டை கோசு?னு கேட்டாங்கனா என்ன பதில் சொல்றது?, ச்சே கம்முனு இருந்திருக்கலாம்.. ப்ச் கொட்டி நிமிர்ந்து பார்க்கும் போது பிப்த் ஸ்டாண்டர்ட் ரூம் முன்னாடி நின்று கொண்டிருந்தேன். அட! ஒருவேளை டபுள் ப்ரோமொஷனா!?! போன வாரம் கூட இப்ராகிம் டபுள் ப்ரோமோஷன் வாங்கி நம்ம கிளாசுக்கு வந்தானே.. இதே மாதிரி முட்டை கொசுன்னு சொல்லி இருப்பானா?.. இருந்தாலும் முட்டை கோசுக்கு போய்... என்ற யோசனையில் இருந்து எளிதாக வெளியே வரவைக்கும் உறுமலுடன் "ம்ம் டெல் தெம்.." என்றார் மேடம். டபுள் ப்ரோமோஷன் வாங்குவதை பாதியிலே விட்டுவிட்டு மேடமை புரியாமல் பார்த்தேன், அதே பாவனையில் கிளாசின் உள்ளேயும் எட்டிப் பார்த்தேன். ஒட்டு மொத்த பசங்களும் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த பாம்பு டான்ஸ் ஆடும் பொண்ணும் (அவ்ளோ அழகு !) திரும்பி பார்த்துக்கொண்டிருப்பது ஏனோ என்னை மிகவும் நெளியச் செய்தது.. டெல் தெம்னா இவங்ககிட்ட எதோ சொல்லனும்.. என்னத்த சொல்லனும்?? ஓ அதுவா.., அதற்குள் "ம்ம் கமான்" மறுபடியும் மேடம் லேசாக உறும அவசர அவசரமாக கோசு மட்டும் வாயில் இருந்து அபத்தமாய் உருண்டு விழுந்தது முட்டையை காணவில்லை. எந்த கேள்வியும் கேட்க்க படாமல் "ம்ம் டெல் தெம் ..கமான்.." என்ற உறுமலுக்கு வெறுமனே "கோசு " என்ற பதில் நாராசமாய் இருந்தது.. நாராசமாய்தான் இருக்கும். அந்த கிளாசில் இருந்த ஜெயா மிஸ் வேறு கோல் என்று சிரித்து விட்டார். ச்சே.. வேற ஒரு கிளாஸ்ல பப்பி ஷேம் ஆய்டுச்சே.. இனி யாராவது கேள்வி கேட்கட்டும்.. மேடம் கைபிடியை லேசாக தளர்த்திய மறுவிநாடி என் பெஞ்சில் அமர்ந்திருந்தேன். அன்றில் இருந்து இரண்டு விஷயங்கள் என்னில் ஒட்டிக்கொண்டது ஒன்று முட்டை கோசு மேல் கூடுதல் பற்று(!) இரண்டாவது உங்களுக்கே புரிந்திருக்கும்.