Friday, October 12, 2012

பூட்டிக்கொள்கிறேன் என்னை

யாரையும்
எளிதில் அனுமதிக்காமல்
ஒரு
பூட்டைக்கொண்டு
பூட்டிக்கொள்கிறேன்
என்னை

விதவிதமான திறவுகோல்
பொருந்திப்போகும்
அந்த
விசித்திர பூட்டைக்கொண்டு
பூட்டிக்கொள்கிறேன்
எல்லோரையும் போலவே

எல்லோரையும் போலவே
என்னிடமுள்ள
எண்ணிக்கையற்ற திறவுகோலில் -
ஒன்றை தேர்ந்தெடுத்து
உன்னை நெருங்குகிறேன்
உன்னை திறப்பதற்கு

உனக்கான
என் திறவுகோல்
உன்
தந்தையிடமோ
தங்கையிடமோ
தோழியிடமோ
காதலியிடமோ அல்லது
காதலனிடமோ
சக பணியாளிடமோ
உயர் அதிகாரியிடமோ
வேறு நண்பனிடமோ
தனித்துவமாய்
இருப்பது போல்
என்னிடமும்
தனித்துவமாய் இருக்கிறது

பொருந்தாத சமயங்களில்
வேறொன்றை
புதிதாய் தயாரித்துக்கொள்கிறேன்
எல்லோரையும் போலவே

பல சமயங்களில்
திறவுகோல் பொருந்தியும்
திறக்காமல்
உரக்கச் சொல்லிவிட்டோ

வெறுமனே கேட்டுக்கொண்டோ
திரும்பியிருக்கிறேன்
எல்லோரையும் போலவே

எதை பதுக்கி வைத்து
காத்திருக்கிறோம்?
எதுவரையில்
இப்படி காத்திருப்போம்?

அத்தனை
பூட்டுகளுக்கும் பொதுவான
ஒரு திறவுகோல் பெற்றுக்கொண்டும்
வெகு சுலபமாய் தொலைத்து விட்டு
திறவுகோல் நிபுணனாய்
அலைகிறேன்
எல்லோரையும் போலவே


Wednesday, October 10, 2012

நான் நிறைந்திருக்கிறேன்

நான் எப்படி
இங்கு மட்டும் 
இருக்க முடியும் 

பரவி புதைந்திருக்கும்
நினைவுகளைத் திரட்டி 
மொத்த நினைவுகளின் - தொகுப்பாய் 
நான் எப்படி
இங்கு மட்டும் 
இருக்க முடியும்

புதைந்திருக்கும் நினைவுகளின்
பட்டியல் கூட
இல்லாமல்
நான் எப்படி
இங்கு மட்டும் 
இருக்க முடியும்

என்
நினைவுகள்,
ரம்மியமான
ஒரு பாடலில் கொஞ்சம்
புதைந்திருப்பதைப் போல்

குவிந்துக்கிடகும்
ஈரமான மணலில் கொஞ்சம்
புதைந்திருப்பதைப் போல்

அவித்த
சூடான உணவில் கொஞ்சம்
புதைந்திருப்பதைப் போல்

பழுத்த -
வானத்தில் கொஞ்சம்

உடைந்த -
சிலுவையில் கொஞ்சம்

வெடித்த -
பருத்தியில் கொஞ்சம்

மட்டுப்படாத -
பாடங்களில் கொஞ்சம்

கொடுக்கப்படாத -
முத்தங்களில் கொஞ்சம்

நிறம் மாறாத -
தாவணியில் கொஞ்சம்

ஊந்தித் தள்ளிய -
தோல்வியில் கொஞ்சம்

சொல்ல மறுத்த -
காதலில் கொஞ்சம்

பூட்டப்பட்ட -
கனவுகளில் கொஞ்சம்

புரட்டிப்போட்ட -
கண்களில் கொஞ்சம்

மறுக்கப்பட்ட -
வாய்ப்புகளில் கொஞ்சம்

பண்டிகை -
சட்டையில்  கொஞ்சம்

நினைவுகளாய்
புதைந்துக்கிடக்கும்
நான்
எப்படி
இங்கு மட்டும் 
இருக்க முடியும்

நிறைந்திருக்கிறேன்
ஆழி சூழ் 
உலகு போல 
எங்காவது தட்டுப்பட்டால்
தவறாமல்
விசாரியுங்கள்


நுரை ததும்பும் கோப்பை



நுரை ததும்பி
வழிந்துக்கொண்டிருக்கிறது
போதையூட்டும் வாழ்க்கை

வேறு வேறு
கோப்பைகளில் ஏந்தியபடி
சிறிது சுவைத்தபடி
நடனமாடுகிறேன்

நுரை ததும்ப
உங்கள்
கோப்பைகளில்
ஊற்றுகிறேன்

நுரை ததும்ப
என் கோப்பை
ஒன்றில்
பெற்றுக்கொள்கிறேன்

நுரை மட்டுமே
கூடுதலாய்
நிரம்பி விடுவதை
யாரும் ஏற்பதில்லை
அதற்காய்
மறுபதுமில்லை

வழிந்துக் கொண்டிருக்கும்
நுரைகளற்ற பானத்தை
எனக்கல்லாத கோப்பைகளில்
ஏந்திக்கொண்டு
நடனமாடும் கால்களை
எதிர்பார்த்தபடி
நான்
இருக்கிறேன்

அதுவரை
நுரை ததும்பும்
கோப்பையை சுவைத்தபடி
நடனமாடுகிறேன்



Tuesday, October 9, 2012

யாரிடமாவது விசாரிக்க வேண்டும்

யாரிடமாவது
விசாரிக்கவேண்டும்
யாரிடம் விசாரிப்பது
உன்னை பற்றி ?
யாருக்கு புரியும்
உன் விசாரிப்புகள் பற்றி?

ஒரு வரி
சம்பாஷனையில் - அது
முடிவது
போதுமானதாயில்லை

எப்படி கேட்பது
உன் சௌகரியங்களை பற்றி
எப்படி கேட்பது
உன் கண்களின் உயிர்ப்பை பற்றி
எப்படி கேட்பது
ஒரு இன்மையின் நிரப்புதல் பற்றி

நீ
அத்தனை
ஏமாற்றங்களையும்
எங்கு புதைக்கிறாய்

இவ்வளவு
அன்பு ததும்பும்
கண்கள்
எப்படி உனக்கு மட்டும்

எதை பாராட்டி
இவ்வளவு அன்பு

நீ
எங்கிருந்து  கற்றுக்கொண்டாய்
உனக்கான
கலாச்சாரத்தை

நீ
தலைகோதும்
என்
விரல்களுக்காகவே
இந்த பிறவி
என்று
குழைவதில் - நானல்லவா
லயித்திருந்தேன்

எனக்கு தெரியும்
உன் பக்தி - தரம் குறையாமல்
வேறு யாருக்கும்
கிடைக்குமென்று

அதனாலென்ன
கொடுப்பதும்
கொடுக்கபடுவதும்
அதுவேதான்..

யாரிடமாவது
விசாரிக்க வேண்டும்
உன்னை பற்றி





துண்டிக்கப்பட்ட பார்வை

கன நேரத்தில்
துண்டிக்கப்படும் பார்வை
திகைத்து
பின்
சாவகாசமாய் மிதக்கிறது
காற்றில் அலைகழியும்
ஒரு
காகித குப்பை போல

எப்போதாவது
மின்னிக்கொண்டு
எப்போதும்
விலகிக்கொண்டு

பதறி
சிதறும்
ஞாபக கிழிசலை
தைத்து
ரெக்கை
கட்டிக் கொள்கிறது

கன நேரத்தில்
துண்டிக்கப்பட்ட பார்வை
எங்கோ
மறைந்த பின்னும்
வால் மட்டும்
இன்னும்
துடித்துக்கொண்டிருக்கிறது..





Friday, October 5, 2012

அடையாளம் - 1

மிக
அகலமான சாலை
புழுதி பறக்காமல்
எண்ணற்ற
அதி வேகமான
வாகனங்கள் - வித விதமாய்

வாட்டமாய் நடைப்பாதை
ஆங்காங்கே
இன்று உதிர்ந்த
காய்ந்த சருகுகள்

நாட்கணக்கில்
மழை அடித்தும்
சகதி  படியாத
பாதை

மழையில் நனைந்து
இன்னும் சிறிது தூரம்
நடக்கலாம்

எங்காவது
மண்வாசனையை மட்டும்
மோப்பம் பிடித்து
ஒரு
குடுவையில்
அடைத்துக் கொள்ளவேண்டும்.

விலகல் - 1

ஒரு நீண்ட
குளிர் இரவின்
மௌனத்தைக் விரட்டும்
மெல்லிய விசும்பல்
எங்கும் படர்கிறது

எதன் மீதும்
நம்பிக்கையற்ற - அந்த
விசும்பல்
செவிகளில் கனக்கிறது

தினம்
உடைகிறேன் - அதன்
துயரத்தின் அடர்த்தியை
தாளமுடியாமல்

வேறு யாரை விடவும்
மூத்திர வாடையின்
வீரியத்தை
மிக அதிகமாய்
உணர்ந்துக்கொண்டதை புலம்பினான்,
உணர்ந்ததை விட
உணர்ந்துக்கொண்டே இருப்பதை..

சூடான
தேனீர்
அருந்திக்கொண்டும்

அடுத்த அறையில்
உபசரிப்பை
கேட்டுக்கொண்டும்

விருப்பமில்லாத
நிகழச்சிகளை
பார்த்துக்கொண்டும்

அவ்வப்போது
இடத்தை நகர்த்திக்கொள்ளும்
பல்லியை
கடிந்துக்கொண்டும்

பார்வையால் கடிகார
முட்களை
முடுக்கிகொண்டும்

எப்பொழுதாவது
சாத்தியப்படும்  - ஆழ்ந்த
நித்திரையில் கூட
அதை
உணர்ந்துக்கொண்டே இருப்பதை
புலம்பினான்

அவனுக்கு தெரியும்
மௌனத்தைக் விரட்டும்
அந்த விசும்பலும் - மெல்ல
தோற்றுக்கொண்டிருப்பது பற்றி

ஒரு நீண்ட
குளிர் இரவில்
மௌனத்தைக் விரட்டும்
அந்த விசும்பல்
எழுப்பப்படவில்லை

நம்பிக்கையற்று
விலகிக் கொண்டுவிட்டான்
மனித வாடையில் தொடங்கி
அனைத்திலிருந்தும்  ..


காற்றை நிரப்பும் வார்த்தைகள்

வெறும்
காற்றை நிரப்பும்
இந்த
வார்த்தைகள்..
வெளுப்பதைப் விட
கரைந்துவிடக் கூடாதா

என்ன சொல்லி
ஏற்றுக்கொள்வது
அந்த
சாயப் பூச்சற்ற
வார்த்தைகளை?

இப்பொழுதெல்லாம்
உதிர்ந்த உடனே
வெளுத்துவிடுகிறது..

இதுவும்
அலுப்பாய்த்தான் இருக்கிறது.



Thursday, October 4, 2012

விவாக-ரத்து


ஒரு
சம்பிரதாயமான
திருமணப்  பதிவில்..


எப்போதோ  தெரியப்படுத்திய
அல்லது
தெரியபடுத்தாமல் கைவிடப்பட்ட
ஒரு காதல் ரத்தாவதைப்  போல்..

வீட்டு அலமாரியை விட்டு
புடவையைத் தவிர
மற்ற ஆடைகளின் பயணம்
ரத்தாவதைப்  போல்

தெளிவில்லாதப்  பதட்டத்தைத்  தவிர
அதட்டலும்
கண்டிப்பும்
கோபமும்
அப்பாவிடம் ரத்தாவதைப்  போல்

புரிந்துக்கொண்டோ,
புரிந்துக்கொள்ளாமலோ
வரிந்துக்கொண்ட சில நட்பும்
ரத்தாகிறது - யார் கையொப்பமும்
இல்லாமல்

ஒரு
சம்பிரதாயமான
திருமணப்  பதிவில்.



Monday, October 1, 2012

ராஜீவ் காந்தி


"ஏய் இன்னைக்கு ராஜீவ் காந்தி நம்ம ஊருக்கு வர்றார்டி.." முகத்தில் அப்பி இருந்த ஃப்பேர் அண்ட் லவ்லியை தேய்த்துக் கொண்டு அம்மா சித்தியிடம்  சொல்லிக் கொண்டிருந்தாள். சித்தி, இந்திரா காந்தியை நேரில் பார்த்திருப்பதாகவும் அவரை விட ராஜீவ் காந்தி கலர் அதிகம் இருக்க கூடும் என்றும் உறுதியான குரலில் தன் அனுமானத்தை கூறினாள் . கருத்தாய் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த நான் இந்த  பேச்சை கேட்டு திடுக்கிட்டு சற்று கோபமாய் வெளியேறினேன். எனக்கு ராஜீவ் காந்தியின் மேல் சிறிது கோபம். என்றோ ஒரு நாள் நண்பன் ஒருவன் ஏரோப்ளேன் ஒன்று கைக்கு எட்டும் தூரத்தில் பறந்ததாகவும், அதிலிருந்து ராஜீவ் காந்தி டாட்டா காட்டி சாக்லேட் வீசியதாகவும் சொல்லி எல்லோரையும் உசுப்பிவிட்டிருந்தான். இந்த விஷயம் எப்படியோ என் தெரு வரை பரவி, அன்றில் இருந்து எப்போது ஏரோப்ளேன் பறந்தாலும் மூச்சு முட்டும் வரை அதை விரட்டி தோற்பதே எங்கள் கடமை, லட்சியம் எல்லாம். ஒரு முறை கூட ராஜீவ் காந்தி சாக்லேட் வீசியதில்லை, அட சாக்லேட் கிடக்கிறது ஒரு டாட்டா கூடக் காட்டாமல் போனால் கோபம் வருமா வராதா?. ஏரோப்ளேனில் ஜன்னலை திறந்து டாட்டா காட்டுவதில் இருக்கும் அசௌகரியம் அப்போது விளங்கவில்லை. இருந்த கோபத்தில் மம்மிக்கு டாட்டா சொல்லாமல் பள்ளிக்கு கிளம்பினேன்.



 பள்ளிக்குள் நுழைந்ததும் ஒரே பரபரப்பு, எங்கு பார்த்தாலும் ராஜீவ் காந்தியை பற்றிய பேச்சு, கிளாசுக்குள் நுழைந்த பிறகுதான் விஷயம் தெரிந்தது எங்கள் எல்லோரையும் ராஜீவ் காந்தியை பார்க்க அழைத்து போகிறார்கள் என்று. அதனால் பையை கிளாசிலே வைத்து விட்டு வெளியே வரும்படி மிஸ் சொல்லிச் சென்றார். பையை வைத்துவிட்டு திரும்பும் போதுதான் அவர்களின் தீவிரமான பேச்சு என் காதில் விழுந்தது. மணி, கார்த்தி, ஜக்கு.
ஜக்கு கொஞ்சம் பயத்துடன்அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான். மணி தன்னுடைய முழு ப்ளானையும் மற்ற இருவருக்கும் விளக்கிக் கொண்டிருந்தான். முவரும் தங்களுடைய பென்சிலை முடிந்த வரை  கூர்மையாய் சீவி வைத்து கொள்ள வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும்  குறி தப்பவே கூடாது. என்ன விஷயம் என்று நெருங்கி விசாரித்ததில் மணி கொஞ்சம் விலாவரியாக விளக்கினான். அதாவது ராஜீவ் காந்தியை பார்க்க போகும் போது நாம் வெட்ட வெளியில் உட்கார வேண்டும் என்றும், அங்கு சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு கழுகு நம்மை தாக்க கூடிய அபாயம் இருக்கிறது என்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்தான். அதற்குதான் முவரும் பென்சிலை கூராய் தீட்டி எதிர் தாக்குதலுக்கு தயாராய் இருபதாய் சொல்லி அவர்களை அழைத்துச் சென்று விட்டான். சற்று குழப்பமாய் இருந்தது,  எனக்கு இதில் சிறிதும் உடன்பாடில்லை, பென்சில் வைத்துக் கொண்டு எப்படி?? ஒரு ரெனால்ட்ஸ் பேனா இருந்தால் சமாளிக்கலாம் என்பது என் திட்டவட்டமான கருத்து.

அனைவரையும் வரிசையாக அழைத்துச் சென்று பள்ளியில் இருந்து சற்று தொலைவில் இருந்த காந்தி சிலை அருகே உட்கார வைத்தனர்.  சிறிது  நேரத்தில் ராஜீவ் காந்தி வந்து விட்டார்.. கையசைத்தார்.. கொடி ஏற்றினார்.. சிரித்தார்.. எதை பற்றியோ பேசினார் ..  சாக்லேட் கூட கொடுத்தார். உக்கும்., யாருக்கு வேணும்.. மணி சொன்ன மாதிரி இன்னும் அந்த கழுகு வந்து சேரவில்லை. எல்லோரும் ரா.காந்தி பேசுவதை பார்த்து கொண்டிருக்க நான்கு தலைகள் மட்டும் வான் நோக்கி இருந்தது. நான் அந்த மூவரிடம் இருந்து சற்று தள்ளி அமர்ந்திருந்தேன். முவரும் கையில் பென்சிலை உறுதியாய் பிடித்துக் கொண்டு தயாராய் இருந்தனர். எந்த நேரத்திலும் அந்த சாகசம் நிகழலாம், அப்போது ஜக்குவின் பென்சில் கூர் எங்கோ மோதி உடைந்து விட,  அவன் பதட்டத்தில் அழ ஆரம்பித்துவிட்டான். ஒருவழியாய் கார்த்தி அந்த பென்சிலை சீவி பழையபடி கூர்மையாக்கி கொடுத்தபின் சமாதானமாகி பொசிஷனுக்கு வந்து விட்டான். இதுவரை நான் கழுகை கிட்டிருந்து பார்த்ததில்லை இன்று எப்படியேனும் பார்த்து விடுவோம் என்ற நம்பிக்கையில்  கீழும் மேலும்  மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் ஒரு காக்கை கூட வானில் வந்தபாடு இல்லை, அதற்குள் ஜன கன மன பாட்டு, பின் எல்லோரும் எழுந்து திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டார்கள் . ரா.காந்தி கூட கிளம்பி விட்டார் ...!, ச்சே கழுகு வர்ற வரைக்கும் அவர் இருந்திருக்கலாம்..  இன்னைக்கும் ராஜீவ் காந்தி(!) ஏமாத்தி புட்டாரே..  ப்ச் .. நான் கொஞ்சம் வருத்ததுடன் திரும்பினேன்,  ஜக்கு மட்டும் கொஞ்சம் உற்சாகமாய்...


கொஞ்ச நாட்கள் ராஜீவ் காந்தியை சுத்தமாய் மறந்திருந்தேன். "ஏன்டி ராஜீவ் காந்தி செத்துட்டாரமே ?" முகத்தில் அப்பி இருந்த ஃப்பேர் அண்ட் லவ்லியை தேய்த்துக் கொண்டே மம்மி சித்தியிடம் கேட்டாள்.
 ராஜீவ் காந்தி செத்துட்டாரா.??. சரி கிடக்கட்டும் என்று காதில் வாங்கிக் கொண்டு கடை தெரு பக்கம் நடந்தேன் . கடை தெரு வெறிச்சோடி இருந்தது,  ஆட்டோ நிறுத்தத்தில் ராஜீவ் காந்தியின் பெரிய படம் ஒன்றை மாட்டி பத்தி ஏற்றி வைத்திருந்தார்கள்.  எப்போதும் பால் வாங்கும்  கடை பக்கம் ஒதுங்கினேன். பெருசுகள் ராஜீவ் காந்தியின் மரணத்தை தினத் தந்தி வைத்து துப்புதுலக்கி கொண்டிருந்தார்கள்.

ஒரு பொண்ணு.... வயுத்துல பாம்..... குனிஞ்சது .. வெடிச்சது.. என்று அரை குறையாய் காதில் விழுந்ததே கொஞ்சம் பீதியை கிளப்பியது. பால் வாங்கிக் கொண்டு திரும்பும் போது ஒரு பெருசு "ராஜீவ் காந்தி கூட செத்தது பத்து போலிசும் நாலு பொது ஜனங்களும் தான்.. நம்ம ஊரு கட்சி காரனுங்க ஒருத்தன் கூட அங்க இல்ல.. அது எப்பட்ரா ??" என்று பொருமிக் கொண்டிருந்தார். இந்த கேள்வி மட்டும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, பதில் யாரும் சொன்னதாக தெரியவில்லை. எது எப்படியோ.., என்னை இரண்டு முறை ஏமாற்றிய  ரா.காந்தி இறந்தே போய்விட்டார் :(