Tuesday, June 15, 2010

ஓடி விளையாடு பாப்பா




".. காலை எழுந்தவுடன் படிப்பு,
பின்பு கனிவுக் கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு .. "

என்று பாரதி பாடியதை நம்ம பாப்பாக்கள் பின்பற்றுகிறார்களோ என்னவோ தெரியாது ஆனால் ஜப்பான் பாப்பாக்கள் பாரதியை படிக்காமலே கச்சிதமாய் பின்பற்றுகிறார்கள், காரணம் பள்ளி. ஜப்பானில் நான் தங்கி இருக்கும் இடத்தில இருந்து அலுவலகத்திற்கு போகும் வழியில் மூன்று பள்ளிகள் உள்ளன. விடுமுறை நாட்களில் அங்கு விளையாடுவதை வேடிக்கை பார்ப்பதே எனக்கு பொழுது போக்காகிவிட்டது . நாம் விளையாடுவது போல் ஒரே கிரவுண்டில் பத்து பிட்ச் வைத்து அடித்துக் கொள்ளும் பாரம்பரியம் இவர்களுக்குக் கிடையாது, வாய்ப்பும் கிட்டாது. விடுமுறை நாட்களிலும் பயிற்சியாளர்கள் புடைசூழ கிரவுண்டுக்கு ஆஜராகி பேஜாராய் விளையாடுகிறார்கள். விளையாட்டுக்கேத்த சீருடை, தொப்பி, ஷு சகிதமாகத்தான் விளையாடவே வருகிறார்கள். ஒவ்வொரு மாணவி/மாணவனுக்கும் அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டு பின் அவனுக்கு பிடித்த விளையாட்டினிலோ அல்லது திறமையின் அடிப்படையிலோ குறிப்பிட்ட விளையாட்டில் கூடுதல் கவனம் தரப்படுகிறது. பள்ளி மாணவர்கள் வைத்திருக்கும் விளையாட்டு உபகரணங்களை நம் மாநில விளையாட்டு வீரர்கள் கூட வைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். கிட்ட தட்ட ஒரு ப்ரொபஷனல் விளையாட்டு வீரரை போலதான் ஒவ்வொரு மாணவனும்/மாணவியரும் நடத்தப் படுகிறார்கள். (உடனே நம்ம ஊர குறை சொல்ல ஆரம்பிச்சிடுவிங்களேன்னு கோபப்படாதிங்க, வேற வழி இல்ல புலம்பித்தான் ஆகணும்:( இவ்வளவும் நான் சொல்லக் காரணம் இதில் பத்து சதவிதம் கூட நம் பள்ளிகள் ஆர்வம் காட்டாமல் இருப்பதால்தான் . அதுவும் அரசுப் பள்ளிகளில் சொல்லவே தேவையில்லை. நான் பள்ளியில் படிக்கும் போது பி.டி பீரியட் என்றாலே சலிப்பாய்தான் இருக்கும். ஒட்டு மொத்த வகுப்பிற்கும் ஒரே கால்பந்துதான் கொடுப்பார்கள். கிளாஸ் லீடர் என்ற முறையில் பந்தை ஆசிரியரிடம் இருந்து வாங்கி கீழே வைத்து பலம் கொண்ட மட்டும் ஓங்கி உதைப்பேன் அத்தோடு என் பி.டி பீரியட் முடிந்தது. என்பது பேரும் ஒரு பந்தின் பின் ஓடினால் வேறு என்ன செய்ய முடியும், பந்தை கண்ணால் பார்ப்பதே பெரிய விஷயம். நம் பள்ளிகள் வெறும் கல்வி தொழிற்சாலைகளாக மட்டுமே தொடர்ந்து இயங்கி வருவது போல் பாவ்லா காட்டுகிறது அதையும் உருப்படியாய் செய்வதில்லை. சரி விடுங்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு இதுக்காகவே ஒரு பெருசு சொல்லி வச்சிட்டு போய் இருக்கு, இதையே நானும் சொல்லிட்டு தாண்டி போறேன், வேற என்னத்த செய்ய?



என்னதான் ஜப்பானை வியந்தாலும், இங்கு அனைத்தும் இயந்தரமாகி விட்டது போன்ற உணர்வு தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக சிறுவர்கள் கூட எப்பொழுதும் உற்சாகமின்றியே காணப்படுகின்றனர். சமிபத்தில் நண்பர் ஒருவரை சந்திக்கச் சென்றிருந்தேன், நண்பர் குடும்பத்துடன் ஜப்பானில் நீண்ட நாட்களாக வசிப்பவர். அவரின் மகள் இங்கு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள். அவர் மகளின் பள்ளியை பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அவர் கூறிய விஷயம் திடுக்கிடச் செய்தது, ஜப்பானில் குழந்தைகளுக்கு ஆக்ரோஷ உணர்ச்சி (aggresiveness) குறைவாய் இருக்க மருந்து புகட்டப் படுகிறது என்பதுதான் அது. சுருக்கமாக சொல்லணும் என்றால் சுரணை இல்லாமல் இருக்க பழக்கப் படுத்தவது போல். இது அவர்களின் ஆரம்ப கால பழக்கமா இல்லை உலகப் போருக்குப் பின் எடுக்கப்பட்ட பல சத்திய பிரமாணங்களில் இதுவும் ஒட்டிக் கொண்டதா என்று தெரியவில்லை. எதுவா இருந்தா என்ன நல்ல விஷயம்தானே என்று எண்ண முடியவில்லை, காரணம் சாதாரனமாய் குழந்தைகளிடம் காணும் ஒரு துறு துறுப்பு சுத்தமாய் மிஸ்ஸிங். என் மாமா அவரின் மகளை அடிக்க போகும் பொழுதெல்லாம் அவள் வீட்டின் வெளியில் பொய் நின்றுக் கொண்டு "எங்க ஓடிவந்து என்னய அடி பாக்கலாம்.." என்று இடுப்பை ஆட்டிக் காண்பித்து தெருவில் குதித்து ஓடி விடுவாள். குழந்தைகளுக்கு இந்த சுரணை கூட இல்லாமல் இருந்தால் எப்படி??