Tuesday, May 28, 2013

ஆழ்கடலில்

யாரும் புரிந்துக்கொள்ளும் வார்த்தைகள் தான்
யாருக்கும் உதவாத தகவல் தான்
எளிதில் கடந்துவிடும் குறிப்புகள் தான்
என்னுள் நிரப்பி
எறியப்பட்டு
காலமறியாமல்
திசையறியாமல்
நிலை கொள்ளாமல் மிதக்கிறேன்
அமைதியான ஆழ்கடலில்..

அலை பற்றி
கரைத்தொட்டு
மணல் புதைந்து
வெயில் படிந்தும்
நிலை கொள்ளாமல் மிதக்கிறேன்

அள்ளிக் கையில் எடுத்து
கொஞ்சி முத்தம் கொடுத்து
கைகள் உரசி நடக்கும் போதும்
நிலை கொள்ளாமல் மிதக்கிறேன்

நிறம் மங்கி
ஒளி குன்றி
தீ தின்றும்'
நிலை கொள்ளாமல் மிதப்பேன்
வார்த்தைகள் நிரம்பி..











Wednesday, December 5, 2012

விரும்புகிறேன்

நான்
உன்னிடம்
கூற விரும்புகிறேன்
உனக்கான நம்பிக்கை
புத்தம்புதியதாய்
என்னிடமே உள்ளதென்பதை

ருசித்துக்கொண்டிருக்கும்
உன்னிடம்
கூற விரும்புகிறேன்
உன் தூண்டிலின் பிம்பம் பற்றித்தான்
உன் புழுவை அடைந்தேனென்பதை

எப்பொழுதும்
ஒரு புன்முறுவலோடு
இழந்துக்கொண்டே இருப்பது
அத்தனை சுலபமானதல்ல என்பதை

சாம்பலாகும்
சமரசமான எதிர்பார்ப்புகள்
உனக்கு மட்டுமே
உரிதானதல்ல என்பதை

கண்கள் மூடி
கைகள் அகல
நின்றிருக்கும் உன்னிடம்
கூற விரும்புகிறேன்
அது நீர் வீழ்ச்சி அல்ல
அருவி
கொட்டிக் கொடுக்கிறதென்பதை






Friday, October 12, 2012

பூட்டிக்கொள்கிறேன் என்னை

யாரையும்
எளிதில் அனுமதிக்காமல்
ஒரு
பூட்டைக்கொண்டு
பூட்டிக்கொள்கிறேன்
என்னை

விதவிதமான திறவுகோல்
பொருந்திப்போகும்
அந்த
விசித்திர பூட்டைக்கொண்டு
பூட்டிக்கொள்கிறேன்
எல்லோரையும் போலவே

எல்லோரையும் போலவே
என்னிடமுள்ள
எண்ணிக்கையற்ற திறவுகோலில் -
ஒன்றை தேர்ந்தெடுத்து
உன்னை நெருங்குகிறேன்
உன்னை திறப்பதற்கு

உனக்கான
என் திறவுகோல்
உன்
தந்தையிடமோ
தங்கையிடமோ
தோழியிடமோ
காதலியிடமோ அல்லது
காதலனிடமோ
சக பணியாளிடமோ
உயர் அதிகாரியிடமோ
வேறு நண்பனிடமோ
தனித்துவமாய்
இருப்பது போல்
என்னிடமும்
தனித்துவமாய் இருக்கிறது

பொருந்தாத சமயங்களில்
வேறொன்றை
புதிதாய் தயாரித்துக்கொள்கிறேன்
எல்லோரையும் போலவே

பல சமயங்களில்
திறவுகோல் பொருந்தியும்
திறக்காமல்
உரக்கச் சொல்லிவிட்டோ

வெறுமனே கேட்டுக்கொண்டோ
திரும்பியிருக்கிறேன்
எல்லோரையும் போலவே

எதை பதுக்கி வைத்து
காத்திருக்கிறோம்?
எதுவரையில்
இப்படி காத்திருப்போம்?

அத்தனை
பூட்டுகளுக்கும் பொதுவான
ஒரு திறவுகோல் பெற்றுக்கொண்டும்
வெகு சுலபமாய் தொலைத்து விட்டு
திறவுகோல் நிபுணனாய்
அலைகிறேன்
எல்லோரையும் போலவே


Wednesday, October 10, 2012

நான் நிறைந்திருக்கிறேன்

நான் எப்படி
இங்கு மட்டும் 
இருக்க முடியும் 

பரவி புதைந்திருக்கும்
நினைவுகளைத் திரட்டி 
மொத்த நினைவுகளின் - தொகுப்பாய் 
நான் எப்படி
இங்கு மட்டும் 
இருக்க முடியும்

புதைந்திருக்கும் நினைவுகளின்
பட்டியல் கூட
இல்லாமல்
நான் எப்படி
இங்கு மட்டும் 
இருக்க முடியும்

என்
நினைவுகள்,
ரம்மியமான
ஒரு பாடலில் கொஞ்சம்
புதைந்திருப்பதைப் போல்

குவிந்துக்கிடகும்
ஈரமான மணலில் கொஞ்சம்
புதைந்திருப்பதைப் போல்

அவித்த
சூடான உணவில் கொஞ்சம்
புதைந்திருப்பதைப் போல்

பழுத்த -
வானத்தில் கொஞ்சம்

உடைந்த -
சிலுவையில் கொஞ்சம்

வெடித்த -
பருத்தியில் கொஞ்சம்

மட்டுப்படாத -
பாடங்களில் கொஞ்சம்

கொடுக்கப்படாத -
முத்தங்களில் கொஞ்சம்

நிறம் மாறாத -
தாவணியில் கொஞ்சம்

ஊந்தித் தள்ளிய -
தோல்வியில் கொஞ்சம்

சொல்ல மறுத்த -
காதலில் கொஞ்சம்

பூட்டப்பட்ட -
கனவுகளில் கொஞ்சம்

புரட்டிப்போட்ட -
கண்களில் கொஞ்சம்

மறுக்கப்பட்ட -
வாய்ப்புகளில் கொஞ்சம்

பண்டிகை -
சட்டையில்  கொஞ்சம்

நினைவுகளாய்
புதைந்துக்கிடக்கும்
நான்
எப்படி
இங்கு மட்டும் 
இருக்க முடியும்

நிறைந்திருக்கிறேன்
ஆழி சூழ் 
உலகு போல 
எங்காவது தட்டுப்பட்டால்
தவறாமல்
விசாரியுங்கள்


நுரை ததும்பும் கோப்பை



நுரை ததும்பி
வழிந்துக்கொண்டிருக்கிறது
போதையூட்டும் வாழ்க்கை

வேறு வேறு
கோப்பைகளில் ஏந்தியபடி
சிறிது சுவைத்தபடி
நடனமாடுகிறேன்

நுரை ததும்ப
உங்கள்
கோப்பைகளில்
ஊற்றுகிறேன்

நுரை ததும்ப
என் கோப்பை
ஒன்றில்
பெற்றுக்கொள்கிறேன்

நுரை மட்டுமே
கூடுதலாய்
நிரம்பி விடுவதை
யாரும் ஏற்பதில்லை
அதற்காய்
மறுபதுமில்லை

வழிந்துக் கொண்டிருக்கும்
நுரைகளற்ற பானத்தை
எனக்கல்லாத கோப்பைகளில்
ஏந்திக்கொண்டு
நடனமாடும் கால்களை
எதிர்பார்த்தபடி
நான்
இருக்கிறேன்

அதுவரை
நுரை ததும்பும்
கோப்பையை சுவைத்தபடி
நடனமாடுகிறேன்



Tuesday, October 9, 2012

யாரிடமாவது விசாரிக்க வேண்டும்

யாரிடமாவது
விசாரிக்கவேண்டும்
யாரிடம் விசாரிப்பது
உன்னை பற்றி ?
யாருக்கு புரியும்
உன் விசாரிப்புகள் பற்றி?

ஒரு வரி
சம்பாஷனையில் - அது
முடிவது
போதுமானதாயில்லை

எப்படி கேட்பது
உன் சௌகரியங்களை பற்றி
எப்படி கேட்பது
உன் கண்களின் உயிர்ப்பை பற்றி
எப்படி கேட்பது
ஒரு இன்மையின் நிரப்புதல் பற்றி

நீ
அத்தனை
ஏமாற்றங்களையும்
எங்கு புதைக்கிறாய்

இவ்வளவு
அன்பு ததும்பும்
கண்கள்
எப்படி உனக்கு மட்டும்

எதை பாராட்டி
இவ்வளவு அன்பு

நீ
எங்கிருந்து  கற்றுக்கொண்டாய்
உனக்கான
கலாச்சாரத்தை

நீ
தலைகோதும்
என்
விரல்களுக்காகவே
இந்த பிறவி
என்று
குழைவதில் - நானல்லவா
லயித்திருந்தேன்

எனக்கு தெரியும்
உன் பக்தி - தரம் குறையாமல்
வேறு யாருக்கும்
கிடைக்குமென்று

அதனாலென்ன
கொடுப்பதும்
கொடுக்கபடுவதும்
அதுவேதான்..

யாரிடமாவது
விசாரிக்க வேண்டும்
உன்னை பற்றி





துண்டிக்கப்பட்ட பார்வை

கன நேரத்தில்
துண்டிக்கப்படும் பார்வை
திகைத்து
பின்
சாவகாசமாய் மிதக்கிறது
காற்றில் அலைகழியும்
ஒரு
காகித குப்பை போல

எப்போதாவது
மின்னிக்கொண்டு
எப்போதும்
விலகிக்கொண்டு

பதறி
சிதறும்
ஞாபக கிழிசலை
தைத்து
ரெக்கை
கட்டிக் கொள்கிறது

கன நேரத்தில்
துண்டிக்கப்பட்ட பார்வை
எங்கோ
மறைந்த பின்னும்
வால் மட்டும்
இன்னும்
துடித்துக்கொண்டிருக்கிறது..